நாள் 2 (2019, ஜனவாி 5, சனி)
அதிகாலை
4.30 மணிக்கு மேல் ஒவ்வொருவராக எழுந்து அங்கங்கே திறந்தவெளியில்
(பெண்களுக்கு மட்டுமே கழிப்பறை)
இருட்டோடு இருட்டாக காலைக்கடன் முடித்து தேநீர் அருந்தி ஒருவழியாக 6
மணிக்குள் அனைவரும் விளையாட்டுத்திடல் வந்தடைந்தோம்.
மரபு விளையாட்டு
தாமதமாக வருபவர்
ஏதாவது வித்தியாசமாக செய்து காட்டிய பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்!
இப்படி தாமதமாக வருபவரை மையப்படுத்தி ஏதாவது செய்து பின்பு வகுப்பைத்
தொடங்குவது மூன்று நாட்களும் குதூகலமாக நடந்தது. முதல் நாள்
வகுப்பறைக்குள் செருப்பில்லாமல் இருப்பதும் பிறகு வெளி வகுப்புகளுக்கு
செருப்போடு போவதுமாக எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. எனவே இனி
வானகம் விட்டுச் செல்லும் வரை காலணி அணிவதில்லை என்று முடிவோடு காலை
விளையாட்டிற்குத் தயாராகச் சென்றேன்.
என்ன
விளையாடினோம் என்று ஞாபகம் இல்லை ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு
மேலாக அதிகாலை மார்கழிக் குளிரோடு தொடங்கிய விளையாட்டு மிகுந்த
உற்சாகத்தையும் அகமகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்தது. இப்படி
வெருங்காலோடு திடலில் விளையாடி பல வருடங்களுக்கு மேலாகிறது. ஒவ்வொரு
நிகழ்வு முடிந்ததும் மனம் புதுப்பித்துக் கொண்டே இருந்தது!
பண்ணை வலம்
மொத்த
மாணவர்களையும் இரண்டாகப் பிரித்து செந்தில் ஒரு சாராரையும் ரீகன் ஐயா
(மற்றொரு ஒருங்கிணைப்பாளர்) மற்றவர்களையும் அழைத்து வானகம் சுற்றிச்
சென்று பல்வேறு அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தனர். அவற்றுள் சில:
- சூரிய ஒளி - தாவர வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்று, எனவே சூரிய ஒளி படரும் இடத்தை அடையாளம் கண்டு தாவரங்களை நட வேண்டும்
- ஒரு சிறிய காட்டை காண்பித்து இந்தப் பகுதியில் உள்ள மரங்கள்/செடிகள் மற்றும் இதர தாவரங்கள் எவையும் எங்களால் ஏற்படுத்தப்படவில்லை, அனைத்தும் தாமாக வளர்தவை என்றும் இவ்வாறு நடப்பதில் (இயற்கையில்) பறவைகளின் பங்கு மிக முக்கியமானது என்றார்
- வாய் மடை - வயல் பகுதியின் ஒரு மூலையில் சிறிய தொட்டி அமைத்து அதில் அமிர்த கரைசல்/பஞ்ச காவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களை நீரோடு கலந்து பின் வயலில் வெளியிடும் எளிய முறை
- மழை நீர் அறுவடை - பிறை வடிவில் குட்டைகள் இருப்பதால் பெரும்பாலான மழைநீரை விரயமின்றி சேமிக்க முடியும். சருக்கலான பகுதியின் கடைசியில் பெரிய குட்டை அமைப்பதன் மூலமும் பெருவாரியான நீரை சேமிக்க முடியும் மற்றும் அப்பகுதியில் நீர் வழிந்து குட்டைக்குச் செல்லும் வழியில் சிறு சிறு குழிகள் அமைப்பதன் மூலம் அப்பகுதி முழுமைக்கும் நீர் சேமித்து நீராதாரத்தைப் பெருக்க முடியும்
- உயிர் வேலி - ஆடு, மாடு, இதர கால்நடைகள் மற்றும் வெளி மனிதர்கள் நம் பண்ணைக்குள் அத்து மீறி உள்ளே வராமல் இருக்க முட்செடிகளைக் கொண்டு வேலி அமைத்தல். பெரும்பாலான உயிர்வேலிச் செடிகளில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளது. மூட்டு வலி, சிறுநீரகக்கல், ஜலதோஷம்/இருமல் போன்ற நாம் அன்றாடம் சந்திக்கும் சிறிய/பெரிய உடல் தொந்தரவுகளுக்கு எளிய மருந்தாக இவைகள் பெரிதும் துணை நிற்கும்
- கிராஃப்டிங் - ஒரு தாவரத்தை இன்னொன்றின் கிளைப்பகுதியோடு இணைத்து புது வகை செய்யும் கலப்புப் பயிர் முறை
- கம்ப்போஸ்ட் - கால்நடைக் கழிவுகள் மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்தல்
இன்னும் பல வேளாண்மை அடிப்படைகளை எளிமையாக விளக்கினர் செந்தில் மற்றும் ரீகன்.
பண்ணை வடிவமைப்பு
மதிய
உணவு முடித்து சற்று மயக்கத்தோடு வந்தமர்ந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சிக்
காத்திருந்தது. வகுப்பறைக் கதவின் இடது புறம் அமர்ந்திருந்த நான் கதவின்
வலது புறம் புதிதாக ஒரு பெரியவர் அமர்ந்ததைக் கண்டேன், அவர் சக மாணவர்
ஒருவரை மின் விளக்கைப் போடச் சொன்னார். செந்தில் பண்ணை வடிவமைப்பு
வகுப்பு எடுப்பவரை அத்திவெட்டி ரமேஷ் என்று அறிமுகப்படுத்தினார். உடனே
எனக்கு என்னோடு மருது பாண்டியர் கல்லூரியில் படித்த சக மாணவன் ரமேஷ்
ஞாபகம் வந்தது. நான் வலதுபுறம் கண்ட பெரியவர் என்னோடு படித்த சக மாணவன்
என்ற இன்ப அதிர்ச்சியும் அவரிடம் நான் மாணவனாகக் கற்றுக் கொள்ளப்போகிறேன்
என்பது ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவராக சுயஅறிமுகம்
செய்யச் சொல்லினார் நண்பர் ரமேஷ். என் முறையில் தஞ்சாவூர் கணபதி என்று
மட்டும் கூறினேன். மறு விநாடியே "மருதுபாண்டியர் கணபதி
சுப்பிரமணியன்?" என்று கேள்வி கேட்டார். ஆமாம் என்று புன்னகைத்தேன்! இன்னொரு
சக மாணவர் மாணிக்கம் என்று கூறியவுடன் "முழுப்பெயரே அதுதானா?" என்றும்
"உங்களுக்கு வேறு எதாவது பெயர் உள்ளதா?" என்றும் தனக்கே உரிய நகைச்சுவை
பாணிப்பில் ரமேஷ் இயல்பாகக் கேட்டது எத்தனை பேருக்குப் புரிந்தது என்று
தெரியவில்லை. என் வாழ்வில் தரையில் படம் வரைந்து
வகுப்பெடுத்த ஒரே ஆசிரியர் ரமேஷ் மட்டுமே. இரு சக மாணவர்களை அழைத்து
சாக்பீஸ் மூலம் தரையிலேயே பல படங்களை வரைந்து பண்ணை வடிவமைப்பு குறித்து பல
அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தார் ரமேஷ். அவற்றுள் சில:
- ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் தாராளமாக தற்சார்பு முறையில் வேளாண்மை செய்ய முடியும்
- நிலம் வாங்கியதும் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நிலத்தைச் சுத்தப்படுத்தவது
- நீர் வசதி செய்வது. ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்வதற்கு முன் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது. அதற்கு பல வழிமுறைகள் உள்ளன, அதில் நமக்கு எது சரியாகத் தோண்றுகிறதோ அதைப் பின்பற்றலாம்
- உயிர் வேலி அமைப்பது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பிற்கு சுமார் 5 அடி அகலத்தில் உயிர் வேலி அமைக்கலாம்
- நிலத்தின் தாழ்வான பகுதியில் நீர் சேகரிப்புக் குட்டைகள் அமைத்துக் கொள்வது
- நிலத்தின் மேட்டுப் பகுதியில் நமக்கான வீட்டை அமைத்துக் கொள்வது
- வீட்டின் பின் புறத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துக் கொள்வது
- வீட்டிலிருக்கும்போது நமது கண் பார்வையில் இருக்கும்படி கால்நடைத் தொழுவம் அமைப்பது
- வீட்டருகே பூந்தோட்டம் அமைப்பது
- வீட்டைச்சுற்றி பழத் தோட்டம் அமைப்பது
- சிறு தாணிய வகைகள், எண்ணை வித்துக்கள் இவைகளும் தேவைக்கேற்ப பயிரிடுவது
- ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் முக்கியமானது நாம் அங்கு தங்கியிருந்து தினசரி சில மணி நேரங்கள் ஒதுக்கி வேலை செய்ய வேண்டும், பிறரை நம்பி இருப்பது சரி வராது. அதே நேரத்தில் பண்ணை வேலையாட்கள் தங்குவதற்கும் அவர்களின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதுமாக அப்பண்ணை இருப்பது அவசியம்
இன்னும்
பல முக்கிய விசயங்களை எளிமையாகவும் நகைச்சுவையோடும் நம்மோடு
பகிர்ந்து கொண்டார் ரமேஷ். வகுப்பு முடிந்து இருவரும் பரஸ்பரம் தற்போதைய
வாழ்வு பற்றி பகிர்ந்து கொண்டோம். இறுதி ஆண்டில் மாணவர் விடுதியில்
இருந்து கல்லூரிக்குப் பேருந்தில் செல்லும் போது ஓட்டுநர் அருகே அமர்ந்து நான்
அடித்த ஒரு மொக்கை ஜோக்கை ரமேஷ் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து
நினைவு கூர்ந்தது வியப்பாக இருந்தது. சக மாணவன் நமக்குப் பின்னாளில் சிறந்த
ஆசிரியராக வருவது எத்தனை பேருக்கு வாய்க்குமோ தெரியாது ஆனால் எனக்குக்
கிடைக்கப்பெற்றது.
இடுபொருள் செய்முறை
கணேஷ்
ஐயாவும் ஒரு அக்காவும் (பெயர் ஞாபகம் இல்லை மன்னிக்கவும்) இயற்கை
இடுபொருள் செய்முறை விளக்கங்களை மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தனர்.
வெவ்வெறு வகையான இடுபொருள்கள் பற்றி விளக்கமளித்தனர், அவற்றுள்
முக்கியமானவை:
- அமிர்த கரைசல்
- பஞ்ச காவ்யா (தச காவ்யா/மாட்டு ஊட்டம்)
- மீன் அமிலம்
- தேமோர் கரைசல்
- பூச்சி
கொல்லிகள்விரட்டிகள்
இன்னும் பல செய்முறைகள் ஒரு முழுப் புத்தகத் தொகுப்பாகவே உள்ளது, அது அனைவருக்கும் பயிற்சியின் முடிவில் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
களப்பயிற்சி
மசானபு புக்கோக்கா
இரவு உணவு முடித்து பின் வழக்கம்போல் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கருத்துப்
பரிமாரப்பட்டது. உறங்குவதற்கு முன் உலகப்புகழ்பெற்ற இயற்கை வேளாண்
விஞ்ஞானி மசானபு புக்கோக்கா அவர்களின் ஆவணப் படம் ஒன்று
திரையிடப்பட்டது, அது அனைவருக்கும் அவர் பற்றிய ஓர் அறிமுகத்தை
ஏற்படுத்தியது. மசானபு புக்கோக்கா ஐயாவைப் பார்தததும் எனக்கு இயக்குனர்
ராஜீமுருகன், அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்த மசானபு புக்கோக்கா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகம் ஞாபகம் வந்தது. உலக இயற்கை வேளாண் ஆசானைப் பற்றி படம் பார்த்த திருப்தியோடு அனைவரும் உறங்கச் சென்றோம்.
No comments:
Post a Comment