வானகம் என்றால் என்ன?
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவா்களால்
நிறுவப்பட்ட
தற்சார்பு வாழ்வியலுக்கான ஒர் பயிற்சி/ஆராய்ச்சி மையம். இதன் முக்கியமான மூன்று இலக்குகள்:
- நஞ்சில்லா உணவு
- மருந்தில்லா மருத்துவம்
- சுவரில்லா கல்வி
மேலும் விபரங்களுக்கு Vanagam Official Site
வானகத்தில்
நான் பெற்ற 3 நாள் பயிற்சி வாழ்வின் மறக்க முடியாத ஒரு பேரானந்த அனுபவம்!
ஒரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடைவிடாது
நடந்தது (இரவு நேரம் தவிர). தேநீர்/உணவு இடைவெளி தவிர்த்து ஓய்வு
இல்லாததால் அடுத்தடுத்த நாட்களில் முதல் நாள் நிகழ்வுகள் நினைவுகூறுவதற்கு
சற்று கடினமாக இருந்தது. பயிற்சி முடிந்த வீடு வந்த கையோடு இந்த அனுபவத்தை
ஒரு கட்டுரையாக
(பேப்பர்/பேனா கொண்டு)
எழுத எண்ணியிருந்தேன். வழக்கம்போல் சோம்பேறித்தனத்தால் அது நிகழாமல்
போயிற்று. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து இப்போது ஒரு வலைப்பதிவில் எழுதியுள்ளேன்!
நாள் 1 (2019, ஜனவாி 4, வெள்ளி)
காலை
சுமார் 10 மணியளவில் வானகம் வந்தடைந்தோம். நேராக அனைவரையும் நம்மாழ்வார்
ஐயாவின் நினைவிடத்திற்கு அழைத்து சாலியமங்களம் குமார் ஐயா அவர்களின் ஒரு சிறிய
அறிமுகமும், நம்மாழ்வார் ஐயாவிற்கு அஞ்சலியும் நடந்தது. பிறகு காலை
உணவு முடித்த பின் (பெரிய வட்ட) வகுப்பறைக்கு வந்தபின் 3
நாள் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஐயா அவர்களை அறிமுகம்
செய்தனர்.
வேளாண் அரசியல்
முதல் வகுப்பாக அரச்சலூர் செல்வம் ஐயா அவர்கள்
வேளாண் அரசியல் குறித்துப் பேசினார். முழுமையாக அவர் பேசியது நினைவில்
இல்லையென்றாலும் அதன் சாராம்சம் பின் வருமாறு:
- 20ம் நூற்றாண்டின் மத்தியல், அதாவது சுமார் 1960களில் பசுமைப்புரட்சி என்ற மாபெரும் சாபக்கேடு இந்தியாவை எப்படி ஆட்கொண்டது
- பசுமைப்புரட்சியால் நம் பாரம்பரிய/எளிய/அறிவார்நத வேளாண் முறைகளிலிருந்து நாம் எப்படி ஒரு பெரும் வணிக சந்தையாக மாறினோம்
- நம் பாரம்பரிய நெல் வகைகளக்கு பதிலாக குள்ளரக வகை நெல்கள் எப்படி நம் மீது திணிக்கப்பட்டது, இன்னும் இது போல் நம் மரபு சாரா பல தாணியங்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது
- இயற்கை இடுபொருள்களைக் கொண்ட நம் வேளாண்முறை எப்படி செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு (உயிர்க்கொல்லி) மாறியது
- 1980களில் பசுமைப்புரட்சிக்குப் பிறகு மேற்கொண்ட ஆய்வில் 90% தாய்மார்களின் தாய்ப்பால் நஞ்சுடன் இருப்பது கண்டறியப்பட்டதும், இவ்வுண்மையை உலகறியவிடாது (மண்சான்டோ போன்ற) வேளாண் பெருமுதலாளிகளை எப்படி நம் அரசு காப்பாற்றியது
- விவசாயத்தில் மேலோங்கி இருந்த பஞ்சாப் மாநிலம் கேன்சர் நோயாளிகளின் மாநிலமாக மாறியது (கேன்சர் ரயில்!)
வகுப்பு முடிந்தவுடன் செந்தில் ஐயா அவர்கள் அவ்வகுப்பைப்பற்றிய கருத்துக்களும் பின்னூட்டங்களும் கேட்டுக் கொண்டார். எங்களுக்கும் சந்தேகங்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு நேரம் வழங்கப்பட்டது. இந்த கருத்துப் பறிமாற்ற முறையை ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் செந்தில் மிக நேர்த்தியாக செய்து வந்தார்.
தேனீ வளர்ப்பு
பயிற்சியின்
ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்கள் தேனீ வளர்ப்பு குறித்து மிகவும்
எளிமையாக எடுத்துரைத்தார். தேனீ வளர்ப்பு வகுப்பிற்கு, (பெரிய வட்ட) பிரதான
வகுப்பறையின் அருகேயுள்ள ஒரு மரத்தருகே அமைந்திருந்த ஒரு செயற்கைத் தேன்
கூட்டை சுற்றி நின்று கற்றுக்கொண்டோம். அதன் முக்கிய குறிப்புகள்:
- மகரந்தச் சேரக்கை எனும் செயல்பாடு மூலம் உணவு உற்பத்தி செய்வதில் தேனீக்களின் பங்கு இப்பூவுலகில் மகத்தானது
- ஒரு துளி தேன் சேகரிக்க தேனீக்கள் கொடுக்கும் உழைப்பு அளப்பரியது
- தேன் சேகரிக்க தேனீக்கள் செல்லும் பாதையை நடன மொழி மூலம் பரிமாரிக் கொள்கின்றன
- மழை வருவதைக் கணிக்கும் திறன் தேனீக்களுக்கு உண்டு
- அறுங்கோண முறையில் தேனடை கட்டுவதன் மூலம் அதிகபட்ச தேன் கூட்டை கட்ட முடிகிறது
- தேன் சேகரிப்பிற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பெட்டியின் நுணுக்கங்கள் மற்றும் அதைக் கையாளும் முறைகள்
- ஒவ்வொரு கூட்டிலும் ராணி தேனீ, ஆண் தேனீ, பணி தேனீ என்று மூன்று வகை உண்டு
- தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்த பிறகு கொஞ்சம் தேன் தேனீக்களுக்கு வைக்க வேண்டும் என்பது தேன் தர்மம்
- இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் ஒருவரின் தோட்டத்தில் இயல்பாகவே தேனீக்கள் வந்து சேரும்!
தேனீ
வளர்ப்பு குறித்த விளக்கங்களுக்குப் பிறகு ஒரு சிறிய தேநீர் இடைவெளி. அதன்
பிறகு கால்நடை வளர்ப்பு பற்றி குமரவேல் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்.
கால்நடை வளர்ப்பு
தன்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகமும் தான்
எப்படி நம்மாழ்வார் ஐயாவோடு பயனித்தார் என்பதையும் கூறினார் குமரவேல்
அவர்கள். திருச்சியில் அவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக
செயலாற்றியது பற்றியும் கூறினார். பின் எங்களை அறிமுகம் செய்து கொள்ளச்
செய்து விட்டு தன் வகுப்பைத் தொடங்கினார். கிட்டத்தட்ட இரண்டு மணி
நேரத்திற்கு மேல் நடந்த அவ்வகுப்பில் பெரிதாக எதுவும் நினைவில் இல்லை, கீழே
குறிப்பிட்ட விசயங்களைத் தவிர
- கால்நடைகள் அனைத்தும் உள்ளூர் ரகத்தைக் கொண்டிருக்கும், எனவே கால்நடைகள் வாங்குவதற்கு முன் உங்கள் ஊர் ரக கால்நடைகளைத் தேர்நத்தெடுப்பது சிறந்தது
- எந்த உயிரனமும் தன் கழிவை உண்ணாது என்ற அடிப்படையைக் கருத்தில் கொண்டு, கால்நடைக் கழிவுகள் இல்லாத இடத்தில் அவைகளுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்
No comments:
Post a Comment