நாள் 3 (2019, ஜனவரி 6, ஞாயிறு)
அதிகாலை
சுமார் 5.00 மணிக்கு எழுந்து இருட்டோடு இருட்டாகக் காலைக்கடன் முடித்து
தேநீர் அருந்தி 6 மணிக்குள் விளையாட்டுத்திடல் வந்தடைந்தோம். வழக்கம்போல்
செந்தில் எங்களை வைத்து விளையாடுவதற்குத் தயாரானார்.
கடல்-நிலம் விளையாட்டு
அது
சற்று வித்தியாசமான விளையாட்டு: கடல்-நிலம் என்பது விளையாட்டின் பெயர்.
ஒரு பெரிய வட்டப்பாதை மற்றும் நடுவில் கூட்டல் வடிவில் ஒரு பாதை வரைந்து
அதற்குள் மட்டும் ஓட வேண்டும் என்பது விதி. கூட்டலால் ஏற்பட்ட நாலு
உட்பகுதிகளுக்குள் கால் வைத்தால் போட்டியாளர் வெளியற வேண்டும் ஏனென்றால்
அது கடல், ஓடுவதற்காக வரைந்த பாதை நிலம். மொத்த பேரையும் இரு அணியாகப்
பிரித்து, ஒரு அணியனர் ஓட வேண்டும் மற்றொரு அணியின் ஒரு வீரா் அவர்களைப்
பிடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள். ஒவ்வொறு அணிக்கும் மாறி
மாறி வாய்பளிக்கப் படும். போட்டியின் இறுதியில் எந்த அணியினர் குறைவாக
வெளியேற்றப்பட்டனரோ அவர்களே வெற்றி பெற்றவராவார். போட்டி படு வேகமாகவும்
உற்சாகமாகவும் நடைபெற்றது. என் வாய்ப்பு வந்த போது என்னால் துரத்திப்
பிடிக்கவும் முடியவில்லை, ஓடித் தப்பிக்கவும் முடியவில்லை (பிக்பாஸ்
மாதிரி). நான் பேசிக்கொண்டிருக்கும்போதே என் சுற்று ஆரம்பித்து என்னை
எதிரணி வீரா் வெளியேற்றி விட்டார். அது செல்லாது என்று கூறி செந்தில்
அவர்களிடம் மறு வாய்ப்பு கேட்டு ஓடினேன். மறுமுறையும் எதிரணி வீரா்
மாணிக்கம் மிக எளிதாக என்னைப் பிடித்து விட்டார். இப்படியெல்லாம் காலை
விளையாட்டு விளையாடுவோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. காலை
விளையாட்டிற்குப் பிறகு மிகுந்த புத்துணர்ச்சியோடு அன்றைய தினம்
துவங்கியது!
பூச்சி எனும் நண்பன்
பூச்சி
வகுப்பிற்கு நிபுணர் பூச்சி செல்வம் ஐயா அவர்கள் வருவதாகத்
திட்டமிடப்பட்டிருந்தது, ஏதோ காரணத்தால் அவர் வர இயலாததால் செந்தில்
அவர்கள் பூச்சிகளைப் பற்றி வகுப்பெடுத்தார். அதன் முக்கியக் குறிப்புகள்:
- பெரும்பான்மையான பூச்சகளின் அடிப்படை உடற்கூறு- தலை, மார்பு, வயிறு, ஆறு கால்கள், இரண்டு இறகுகள், இரண்டு கண்கள், இரண்டு கொம்புகள் கொண்டதாக இருக்கும்
- பூச்சிகள் பிரதானமாக இருவகைப்படும்- சைவப்பூச்சி, அசைவப்பூச்சி
- சைவப்பூச்சிகள் தாவரம் சார்ந்தவற்றை உண்ணும் (எ.கா. இலை, தழை, தண்டு, பழம், காய், ...)
- அசைவப்பூச்சிகள் பிற பூச்சிகளை மட்டும் உண்ணும்
- பெருவாரியான பூச்சிகளின் வளர்ச்சி என்பது முட்டை, புழு, கூட்டுப்புழு, பூச்சி என்று நாலு நிலைகளைக் கொண்டதாகும்
- ஒட்டுண்ணி எனும் பூச்சிகள் பிற பூச்சிகள் மீது முட்டையிட்டு அதன் மீத வளர்ச்சி பெறும்
- இயற்கை வேளாண்மையில் பூச்சிக்கொல்லி என்ற ஒன்று கிடையாது, பூச்சி விரட்டிதான் (இரண்டாம் நாள் பயிற்சி) உண்டு
- பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது என்பது பூச்சிகளை உடனேயும் பூச்சக்கொல்லி தெளிக்கப்பட்ட பயிர்களை உண்ணும் நம்மை மெதுவாகவும் கொல்லும் என்பதே நிதர்சனம்
வாழ்வியல் கல்வி
எது
கல்வி? என்கிற முக்கியமான கேள்வி சமீபமாக நம்மைத் துளைக்கின்ற நிலையில்
தற்காலப் பெற்றோர்கள் கல்வி குறித்து என்ன புரிதலில் உள்ளார்கள் என்றும்
எப்படிக் கல்வியை அணுக வேண்டும் என்று மிகுந்த நகைச்சுவையோடு
எடுத்துரைத்தார் பாஸ்கர் ஐயா. அவர் கூறிய முக்கியக் கருத்துக்கள்:
- கல்வி வணிகமாகிவிட்டது முழுவதும் தனியார் மயமாகிவிட்டது என்பது மிகப்பெரிய மாயை. உண்மையிலேயே தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 75% உள்ளனர் என்பதே உண்மை. மீதமுள்ள 25% மாணவர்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பார்த்துதான் நாம் கல்வி முழுவதும் வணிகமாகிவிட்டது என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்
- தனியார் பள்ளித் தெரிவு செய்யும்போது நம் வசதிக்கேற்ப இருக்க வேண்டும், பக்கத்து வீட்டுக்காரர் லட்சக்கணக்கில் செலவழிக்கிறார் என்பதற்காக அந்தப் பள்ளி உயர்வானது என்பதல்ல. அவ்வளவு பணம் செலவு செய்வது நம் குடும்பத்திற்கும் உகந்ததல்ல
- அதே போல் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு நம் குழந்தைகளுக்கு நல்லது. குழந்தைகளைக் கல்வி என்ற பெயரில் தினம் நெடுந்தூரம் பயணப்படவைப்பது நல்லதல்ல
- குழந்தைகளை எதற்குக் கண்டிக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வகுத்துக்கொள்ள வேண்டும். வீட்டுப்பாடம், தேர்வு, மதிப்பெண் போன்ற அற்ப காரணங்களுக்காக ஆசிரியர்களோ பெற்றோர்களோ குழந்தைகளை அடித்தல் கடுமையாகப் பேசுதல் கூடாது. அதே வேளையில் உயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கீனச் செயல்கள் செய்யும் போது கண்டித்தல் வேண்டும்
- பலராலும் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் முக்கியமான ஒன்று- உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது ஒருபோதும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதைப் படிக்க வேண்டும். படிப்பிலே ஆர்வம் இல்லை என்றாலும் பரவாயில்லை, படிப்பு மட்டும் வாழ்க்கை ஆகி விடாது. சிறு தொழிலோ, விளையாட்டுத் துறையோ அவர்களுக்கு எது ஆர்வமோ அதை செய்ய அனுமதித்து அதற்கு ஊக்குவிக்க வேண்டும்
மூன்று நாள் வகுப்பில் நாங்கள் அதிகம் வாய் விட்டு சிரித்தது இவர்
வகுப்பில் தான். நான் தனிப்பட்டு கவலை மறந்து சிரித்ததும் (பல ஆண்டுகள்
கழித்து) இவரால் தான் என்றால் அது மிகையாகாது. எடுத்துரைத்த கருத்துக்கள்
குறைவு என்றாலும் அதன் ஆழமும் அதைக் கூறிய விதமும் என்றும் நினைவில்
கொள்ளத் தகுந்த வகையில் கூறினார்.
வளர்ச்சி ஊக்கிகள்
இயற்கை
வேளாண்மையில் இயற்கை இடுபொருட்கள்/ இயற்கை உரம் ஆகியவற்றோடு பல விதமான
வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி ஊக்கி பற்றி
வகுப்பெடுக்க ஹூசைன் ஐயா வந்திருந்தார். அவர் எடுத்துரைத்த பல வகை நினைவில்
ஒன்றும் இல்லையென்றாலும் அதன் அடிப்படைத் தத்துவம் இதுதான்- வெவ்வெறு
வகையான கால்நடைக் கழிவுகளை வித விதமாக பயன்படுத்தி பலதரப்பட்ட செடிகள்
மூலம் பயிர்கள் மீது தெளிப்பது மிகுந்த பலனைத் தரும். சற்று நீளமாகத்
தெரிந்தாலும் வகுப்பில் தொய்வில்லாதபடி புதுப்புது விசயங்களை அடிக்கிக்
கொண்டே இருந்தார் ஐயா. தீடிரென அரசியல் பேச்சு வந்தபோது எங்கள் பயிற்சி
வகுப்பில் ஒருவர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நேரடி பேத்தி என்று தன்னை மெதுவாக
அறிமுகப்படுத்திக் கொண்டது வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
பழகுவதற்கு
மிகவும் எளிய மனிதராக இருந்தார் ஹூசைன் ஐயா. தன் வாழ்நாள் முழுவதும் இது
போன்ற இயற்கை வேளாண் ஆராய்ச்சியிலேயே கழித்ததாகத் தெரிவித்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவர் கண்டுபிடித்த ஒரு எளிய முறையை நம்மாழ்வார்
ஐயாவிற்கு சமர்ப்பணமாகக் கொடுத்ததாகவும் கூறினார்.
அவர் கூறியவற்றில் நெஞ்சில் முள் தைத்த உண்மை, நம் சகோதரிகள் அணிந்து
கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் நாப்கின்களில் இருக்கும்
பஞ்சுகள் செயற்கை வேளாண்மையில் தயாரிக்கப் பட்டதால் அவற்றுள் மிகுந்த நஞ்சு
கலந்திருக்கும் மற்றும் அதைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கொடிய
நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்பதாகும்.
மாடித் தோட்டம்
என்
போன்ற நகர வாசிகள் வீடு இருந்தும் ஒரு சதுர அங்குலம் கூட மண்
இல்லாதவர்களுக்காக வீட்டு/மாடித் தோட்டம் பற்றி செந்தில் வகுப்பெடுத்தார். குறிப்புகள் எதுவும் நினைவில் இல்லை, தோழர் செந்தில் மன்னிக்கவும் :-)
புத்தகக் கண்காட்சி
மதிய
உணவு முடித்து நம்மாழ்வார் ஐயா, மருத்துவர் கு.சிவராமன் ஐயா போன்ற
என்னற்ற வேளாண்/சூழலியல் செயல்பாட்டாளர்கள் எழுதிய புத்தகங்கள் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்தன. காட்சியில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றின்
தலைப்புமே நம்மை ஈர்ப்பதாக இருந்தது. ஆனால் வாங்கிய புத்தகங்கள்
பெரும்பாலனவை இன்னும் வீட்டின் பரணில் உறங்கிய நிலையில் புதுப் புத்தகம்
வாங்கி வீணாக வைத்திருப்பது சரியல்ல என்றெண்ணி புத்தகம் எதுவும் வாங்க
மனமில்லை. இருந்தாலும் என் மனைவிக்காக பால் அரசியல் என்ற சிறிய புத்தகம்
ஒன்றை மட்டும் வாங்கினேன் (வாங்கியதற்கு பலனாக வீடு வந்த மறு நாளே அதை
முழுதும் படித்து விட்டேன்). மனைவியை படிக்க சொல்லி வேண்டுகோள்
விடுத்துள்ளேன்.
மற்றும்
இயற்கை முறையில் செய்யப்பட்ட பல நாட்டுப் பலகாரங்கள், குளியல் பொடி,
பற்பொடி, எண்ணைகள், இன்னும் சில இயற்கைப் பொருள்களும் நியாமான விலையில்
இருந்தன.
எண் விளையாட்டு
இடைவிடாது
பயிற்சியால் கலைப்புடன் இருந்த எங்களை கடைசியாக ஒருமுறை உற்சாகப்படுத்த
ஆயத்தமானார் செந்தில். வரிசையாக ஒன்று முதல் ஒவ்வொருவராக அடுத்தடுத்த
எண்ணைக் கூற வேண்டும் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண் (உதாரணம் 35) வரும் போது
அவர் மட்டும் எண்ணைக் கூறாமல் தொடையைத் தட்ட வேண்டும். இதில் நிர்ணயம்
செய்யப்பட்ட எண்ணைக் கூறி விட்டாலும் சரி அல்லது எண் கூற வேண்டியவர்
தொடையைத் தட்டினாலும் சரி, மறுபடியும் தவறு செய்த நபர் எண் ஒன்றிலிருந்து
ஆரம்பிக்க வேண்டும். ஒரு முழு 35 சொல்வதற்கு எங்களுக்கு வெகு நேரம் ஆகி
விட்டது. ஒருவழியாக பிசகின்றி விளையாட்டை வெற்றியாேடு முடித்தோம்.
பால் அரசியல்
வேளாண்
அரசயிலில் தொடங்கிய எங்கள் 3 நாள் வானகப் பயிற்சி பால் அரசயிலில் சாலியமங்களம்
குமார் ஐயா மூலம் நிறைவுபெற்றது. தாய்ப்பாலை மறக்கடித்து புட்டிப்பாலும்
மின் நவீன உலகில் பாக்கெட் பாலும் எப்படி நம் மீது திணிக்கப்பட்டது என்றும்
மாட்டுப் பாலே ஒன்றும் ஓவியம் அல்ல, பாக்கெட் பால் கெடுதல் என்று மாட்டுப்
பால் பின் தேவையில்லாமல் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும்
கூறினார். இயற்கை என்பது வெறும் மலை அருவி காடு போன்றவை மட்டுமல்ல, அது
ஒரு தத்துவம்- இருப்பதைப் பகிர்ந்துண்டு சூழல் சீர்கேடின்றி வாழ்வதே இயற்கை
அடிப்படை அறம் என்று எடுத்துரைத்தார்.
சான்றிதழ் வழங்குதல்
குமார் ஐயா அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பயிற்சி பெற்ற அனைவருக்கும் இயற்கை இடுபொருட்கள் செய்முறைப் புத்தகம்
இலவசமாக வழங்கப்பட்டது. அனைவரும் ஒரு குழுப் புகைகப்படம் எடுத்துக்
கொண்டோம். பயிற்சியில் நண்பர்களானோர் பரஸ்பரம் தொலைபேசி எண் பரிமாரிக்
கொண்டனர். வானகத்தை விட்டு நீங்கா மனதோடு அவரவர் தம் ஓட்டப் பந்தய
வாழ்வில் விட்ட இடத்திலிருந்து ஓடக் கிளம்பினோம்.
வானகம் என்ன தான் செய்தது
இந்த
மூன்று நாட்களில் எடுத்துக் கொண்ட எவ்விதமான பயிற்சி குறித்தும் நான்
குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை, காரணம் அது எதுவும் பின்னாளில் நான் கனவு
காணும் பண்ணை வீட்டில் நடைமுறைக்கு உதவாது. வானகத்தில் (அல்லது வேறு
எங்கும்) மாதக் கணக்கில் தங்கிப் பெறும் பயிற்சியே தற்சார்பு வேளாண்
வாழக்கைக்கு உதவும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். பின்பு எதற்கு இந்த 3
நாள் பயிற்சி?
3 நாள் பயிற்சி என்பது வேளாண் வாழ்வின் அடிப்படைத்
தத்துவங்களை நமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. வேளாண் வாழ்வு மட்டுமின்றி
இயற்கை குறித்த ஒரு புரிதலை, ஒரு புதுப் பார்வையை நமக்கு அளிப்பதாக
இருந்தது. வானகம் மூன்று நாள் பயிற்சி பெற்ற பிறகு:
- சக உயிரனங்களை நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
- சூழலியல் குறித்து ஒரு விழப்புணர்வு அடைந்தேன்
- சூழல் பாதுகாப்பிற்கு என்னளவில் என்ன மாற்றங்களை செய்து கொள்ள முடியுமோ அதை செய்கிறேன்
- சூழல் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள முயற்சிக்கறேன்
- சூழல் பாதுகாப்பு குறித்தும், அரசும் அதிகாரமும் பெருமுதலாளிகளும் நம் சூழலை எவ்வளவு சீர்கேட்டிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறித்தும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நண்பர்களிடத்தும் உறிவனர்களிடத்தும் உரையாடுகிறேன்
- சூழலியல் குறித்து ஒரு புரிதலை, இயற்கை மீது தன்னியல்பாக ஒரு நேசத்தை என் குடும்பத்தினரிடம் ஏற்படுத்தினால் அது நான் இந்த இயற்கைக்கு செய்யும் மகத்தான பணியாகக் கருதுகிறேன்.
வானகத்தில் அடுத்த பயிற்சி பெற மனம் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு சந்தர்ப்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...