Friday, May 17, 2019

Could a pen drive sustain a thorough wash?

I used to keep my pen drive always with me which has important accounts data. And the reserved place for it is my pants ticket pocket. Every time my pants get changed, the pen drive gets into place without fail. 

But then this morning when I looked for my pen drive in its usual place its not there and I was recalling where it could have been. But it was shocking to know that yesterday my pants was changed and I forgot to swap its place. Even more shocking was that the pants was washed and hanging in the balcony to get dried up! So when I looked above the pant was hanging down and precisely the ticket pocket facing down with the impression of my pen drive over its thin material. Oops!

I couldn't imagine the amount of stress my pen drive had gone through all the while being washed! The pants was not alone but with a bunch of other clothes, meaning that the pen drive had been through more time than had the pants been washed alone! Agonizing myself for my mistake and then very upset for such a bad experience in the very morning. I was quite sure the pen drive wouldn't even get detected in the first place.

My wife made a pun that all the data would've gone and the pen drive would now be clean formatted ;-) A few minutes later, she tested it and asked me to go to shop relax. Yup, the answer to the title is Yes :-) After all, part of its name has 'king' :-D

Friday, April 12, 2019

என்னை என்ன செய்தது வானகம்? நாள் 3

நாள் 3 (2019, ஜனவரி 6, ஞாயிறு)

அதிகாலை சுமார் 5.00 மணிக்கு எழுந்து இருட்டோடு இருட்டாகக் காலைக்கடன் முடித்து தேநீர் அருந்தி 6 மணிக்குள் விளையாட்டுத்திடல் வந்தடைந்தோம். வழக்கம்போல் செந்தில் எங்களை வைத்து விளையாடுவதற்குத் தயாரானார்.

கடல்-நிலம் விளையாட்டு

அது சற்று வித்தியாசமான விளையாட்டு: கடல்-நிலம் என்பது விளையாட்டின் பெயர். ஒரு பெரிய வட்டப்பாதை மற்றும் நடுவில் கூட்டல் வடிவில் ஒரு பாதை வரைந்து அதற்குள் மட்டும் ஓட வேண்டும் என்பது விதி. கூட்டலால் ஏற்பட்ட நாலு உட்பகுதிகளுக்குள் கால் வைத்தால் போட்டியாளர் வெளியற வேண்டும் ஏனென்றால் அது கடல், ஓடுவதற்காக வரைந்த பாதை நிலம். மொத்த பேரையும் இரு அணியாகப் பிரித்து, ஒரு அணியனர் ஓட வேண்டும் மற்றொரு அணியின் ஒரு வீரா் அவர்களைப் பிடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள். ஒவ்வொறு அணிக்கும் மாறி மாறி வாய்பளிக்கப் படும். போட்டியின் இறுதியில் எந்த அணியினர் குறைவாக வெளியேற்றப்பட்டனரோ அவர்களே வெற்றி பெற்றவராவார். போட்டி படு வேகமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. என் வாய்ப்பு வந்த போது என்னால் துரத்திப் பிடிக்கவும் முடியவில்லை, ஓடித் தப்பிக்கவும் முடியவில்லை (பிக்பாஸ் மாதிரி). நான் பேசிக்கொண்டிருக்கும்போதே என் சுற்று ஆரம்பித்து என்னை எதிரணி வீரா் வெளியேற்றி விட்டார். அது செல்லாது என்று கூறி செந்தில் அவர்களிடம் மறு வாய்ப்பு கேட்டு ஓடினேன். மறுமுறையும் எதிரணி வீரா் மாணிக்கம் மிக எளிதாக என்னைப் பிடித்து விட்டார். இப்படியெல்லாம் காலை விளையாட்டு விளையாடுவோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. காலை விளையாட்டிற்குப் பிறகு மிகுந்த புத்துணர்ச்சியோடு அன்றைய தினம் துவங்கியது!

பூச்சி எனும் நண்பன்

பூச்சி வகுப்பிற்கு நிபுணர் பூச்சி செல்வம் ஐயா அவர்கள் வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, ஏதோ காரணத்தால் அவர் வர இயலாததால் செந்தில் அவர்கள் பூச்சிகளைப் பற்றி வகுப்பெடுத்தார். அதன் முக்கியக் குறிப்புகள்:
  • பெரும்பான்மையான பூச்சகளின் அடிப்படை உடற்கூறு- தலை, மார்பு, வயிறு, ஆறு கால்கள், இரண்டு இறகுகள், இரண்டு கண்கள், இரண்டு கொம்புகள் கொண்டதாக இருக்கும்
  • பூச்சிகள் பிரதானமாக இருவகைப்படும்- சைவப்பூச்சி, அசைவப்பூச்சி
  • சைவப்பூச்சிகள் தாவரம் சார்ந்தவற்றை உண்ணும் (எ.கா. இலை, தழை, தண்டு, பழம், காய், ...)
  • அசைவப்பூச்சிகள் பிற பூச்சிகளை மட்டும் உண்ணும்
  • பெருவாரியான பூச்சிகளின் வளர்ச்சி என்பது முட்டை, புழு, கூட்டுப்புழு, பூச்சி என்று நாலு நிலைகளைக் கொண்டதாகும்
  • ஒட்டுண்ணி எனும் பூச்சிகள் பிற பூச்சிகள் மீது முட்டையிட்டு அதன் மீத வளர்ச்சி பெறும்
  • இயற்கை வேளாண்மையில் பூச்சிக்கொல்லி என்ற ஒன்று கிடையாது, பூச்சி விரட்டிதான் (இரண்டாம் நாள் பயிற்சி) உண்டு
  • பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது என்பது பூச்சிகளை உடனேயும் பூச்சக்கொல்லி தெளிக்கப்பட்ட பயிர்களை உண்ணும் நம்மை மெதுவாகவும் கொல்லும் என்பதே நிதர்சனம்

வாழ்வியல் கல்வி

எது கல்வி? என்கிற முக்கியமான கேள்வி சமீபமாக நம்மைத் துளைக்கின்ற நிலையில் தற்காலப் பெற்றோர்கள் கல்வி குறித்து என்ன புரிதலில் உள்ளார்கள் என்றும் எப்படிக் கல்வியை அணுக வேண்டும் என்று மிகுந்த நகைச்சுவையோடு எடுத்துரைத்தார் பாஸ்கர் ஐயா. அவர் கூறிய முக்கியக் கருத்துக்கள்:
  • கல்வி வணிகமாகிவிட்டது முழுவதும் தனியார் மயமாகிவிட்டது என்பது மிகப்பெரிய மாயை. உண்மையிலேயே தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 75% உள்ளனர் என்பதே உண்மை. மீதமுள்ள 25% மாணவர்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பார்த்துதான் நாம் கல்வி முழுவதும் வணிகமாகிவிட்டது என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்
  • தனியார் பள்ளித் தெரிவு செய்யும்போது நம் வசதிக்கேற்ப இருக்க வேண்டும், பக்கத்து வீட்டுக்காரர் லட்சக்கணக்கில் செலவழிக்கிறார் என்பதற்காக அந்தப் பள்ளி உயர்வானது என்பதல்ல. அவ்வளவு பணம் செலவு செய்வது நம் குடும்பத்திற்கும் உகந்ததல்ல
  • அதே போல் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு நம் குழந்தைகளுக்கு நல்லது. குழந்தைகளைக் கல்வி என்ற பெயரில் தினம் நெடுந்தூரம் பயணப்படவைப்பது நல்லதல்ல
  • குழந்தைகளை எதற்குக் கண்டிக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வகுத்துக்கொள்ள வேண்டும். வீட்டுப்பாடம், தேர்வு, மதிப்பெண் போன்ற அற்ப காரணங்களுக்காக ஆசிரியர்களோ பெற்றோர்களோ குழந்தைகளை அடித்தல் கடுமையாகப் பேசுதல் கூடாது. அதே வேளையில் உயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கீனச் செயல்கள் செய்யும் போது கண்டித்தல் வேண்டும்
  • பலராலும் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் முக்கியமான ஒன்று- உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது ஒருபோதும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதைப் படிக்க வேண்டும். படிப்பிலே ஆர்வம் இல்லை என்றாலும் பரவாயில்லை, படிப்பு மட்டும் வாழ்க்கை ஆகி விடாது. சிறு தொழிலோ, விளையாட்டுத் துறையோ அவர்களுக்கு எது ஆர்வமோ அதை செய்ய அனுமதித்து அதற்கு ஊக்குவிக்க வேண்டும்

மூன்று நாள் வகுப்பில் நாங்கள் அதிகம் வாய் விட்டு சிரித்தது இவர் வகுப்பில் தான். நான் தனிப்பட்டு கவலை மறந்து சிரித்ததும் (பல ஆண்டுகள் கழித்து) இவரால் தான் என்றால் அது மிகையாகாது. எடுத்துரைத்த கருத்துக்கள் குறைவு என்றாலும் அதன் ஆழமும் அதைக் கூறிய விதமும் என்றும் நினைவில் கொள்ளத் தகுந்த வகையில் கூறினார்.

வளர்ச்சி ஊக்கிகள்

இயற்கை வேளாண்மையில் இயற்கை இடுபொருட்கள்/ இயற்கை உரம் ஆகியவற்றோடு பல விதமான வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி ஊக்கி பற்றி வகுப்பெடுக்க ஹூசைன் ஐயா வந்திருந்தார். அவர் எடுத்துரைத்த பல வகை நினைவில் ஒன்றும் இல்லையென்றாலும் அதன் அடிப்படைத் தத்துவம் இதுதான்- வெவ்வெறு வகையான கால்நடைக் கழிவுகளை வித விதமாக பயன்படுத்தி பலதரப்பட்ட செடிகள் மூலம் பயிர்கள் மீது தெளிப்பது மிகுந்த பலனைத் தரும். சற்று நீளமாகத் தெரிந்தாலும் வகுப்பில் தொய்வில்லாதபடி புதுப்புது விசயங்களை அடிக்கிக் கொண்டே இருந்தார் ஐயா. தீடிரென அரசியல் பேச்சு வந்தபோது எங்கள் பயிற்சி வகுப்பில் ஒருவர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நேரடி பேத்தி என்று தன்னை மெதுவாக அறிமுகப்படுத்திக் கொண்டது வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

பழகுவதற்கு மிகவும் எளிய மனிதராக இருந்தார் ஹூசைன் ஐயா. தன் வாழ்நாள் முழுவதும் இது போன்ற இயற்கை வேளாண் ஆராய்ச்சியிலேயே கழித்ததாகத் தெரிவித்தார். பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவர் கண்டுபிடித்த ஒரு எளிய முறையை நம்மாழ்வார் ஐயாவிற்கு சமர்ப்பணமாகக் கொடுத்ததாகவும் கூறினார். அவர் கூறியவற்றில் நெஞ்சில் முள் தைத்த உண்மை, நம் சகோதரிகள் அணிந்து கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் நாப்கின்களில் இருக்கும் பஞ்சுகள் செயற்கை வேளாண்மையில் தயாரிக்கப் பட்டதால் அவற்றுள் மிகுந்த நஞ்சு கலந்திருக்கும் மற்றும் அதைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்பதாகும்.

மாடித் தோட்டம்

என் போன்ற நகர வாசிகள் வீடு இருந்தும் ஒரு சதுர அங்குலம் கூட மண் இல்லாதவர்களுக்காக வீட்டு/மாடித் தோட்டம் பற்றி செந்தில் வகுப்பெடுத்தார். குறிப்புகள் எதுவும் நினைவில் இல்லை, தோழர் செந்தில் மன்னிக்கவும் :-)

புத்தகக் கண்காட்சி

மதிய உணவு முடித்து நம்மாழ்வார் ஐயா, மருத்துவர் கு.சிவராமன் ஐயா போன்ற என்னற்ற வேளாண்/சூழலியல் செயல்பாட்டாளர்கள் எழுதிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. காட்சியில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றின் தலைப்புமே நம்மை ஈர்ப்பதாக இருந்தது. ஆனால் வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலனவை இன்னும் வீட்டின் பரணில் உறங்கிய நிலையில் புதுப் புத்தகம் வாங்கி வீணாக வைத்திருப்பது சரியல்ல என்றெண்ணி புத்தகம் எதுவும் வாங்க மனமில்லை. இருந்தாலும் என் மனைவிக்காக பால் அரசியல் என்ற சிறிய புத்தகம் ஒன்றை மட்டும் வாங்கினேன் (வாங்கியதற்கு பலனாக வீடு வந்த மறு நாளே அதை முழுதும் படித்து விட்டேன்). மனைவியை படிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

மற்றும் இயற்கை முறையில் செய்யப்பட்ட பல நாட்டுப் பலகாரங்கள், குளியல் பொடி, பற்பொடி, எண்ணைகள், இன்னும் சில இயற்கைப் பொருள்களும் நியாமான விலையில் இருந்தன.

எண் விளையாட்டு

இடைவிடாது பயிற்சியால் கலைப்புடன் இருந்த எங்களை கடைசியாக ஒருமுறை உற்சாகப்படுத்த ஆயத்தமானார் செந்தில். வரிசையாக ஒன்று முதல் ஒவ்வொருவராக அடுத்தடுத்த எண்ணைக் கூற வேண்டும் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண் (உதாரணம் 35) வரும் போது அவர் மட்டும் எண்ணைக் கூறாமல் தொடையைத் தட்ட வேண்டும். இதில் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணைக் கூறி விட்டாலும் சரி அல்லது எண் கூற வேண்டியவர் தொடையைத் தட்டினாலும் சரி, மறுபடியும் தவறு செய்த நபர் எண் ஒன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு முழு 35 சொல்வதற்கு எங்களுக்கு வெகு நேரம் ஆகி விட்டது. ஒருவழியாக பிசகின்றி விளையாட்டை வெற்றியாேடு முடித்தோம்.

பால் அரசியல்

வேளாண் அரசயிலில் தொடங்கிய எங்கள் 3 நாள் வானகப் பயிற்சி பால் அரசயிலில் சாலியமங்களம் குமார் ஐயா மூலம் நிறைவுபெற்றது. தாய்ப்பாலை மறக்கடித்து புட்டிப்பாலும் மின் நவீன உலகில் பாக்கெட் பாலும் எப்படி நம் மீது திணிக்கப்பட்டது என்றும் மாட்டுப் பாலே ஒன்றும் ஓவியம் அல்ல, பாக்கெட் பால் கெடுதல் என்று மாட்டுப் பால் பின் தேவையில்லாமல் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். இயற்கை என்பது வெறும் மலை அருவி காடு போன்றவை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்- இருப்பதைப் பகிர்ந்துண்டு சூழல் சீர்கேடின்றி வாழ்வதே இயற்கை அடிப்படை அறம் என்று எடுத்துரைத்தார்.

சான்றிதழ் வழங்குதல்

குமார் ஐயா அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார். பயிற்சி பெற்ற அனைவருக்கும் இயற்கை இடுபொருட்கள் செய்முறைப் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவரும் ஒரு குழுப் புகைகப்படம் எடுத்துக் கொண்டோம். பயிற்சியில் நண்பர்களானோர் பரஸ்பரம் தொலைபேசி எண் பரிமாரிக் கொண்டனர். வானகத்தை விட்டு நீங்கா மனதோடு அவரவர் தம் ஓட்டப் பந்தய வாழ்வில் விட்ட இடத்திலிருந்து ஓடக் கிளம்பினோம்.

வானகம் என்ன தான் செய்தது

இந்த மூன்று நாட்களில் எடுத்துக் கொண்ட எவ்விதமான பயிற்சி குறித்தும் நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை, காரணம் அது எதுவும் பின்னாளில் நான் கனவு காணும் பண்ணை வீட்டில் நடைமுறைக்கு உதவாது. வானகத்தில் (அல்லது வேறு எங்கும்) மாதக் கணக்கில் தங்கிப் பெறும் பயிற்சியே தற்சார்பு வேளாண் வாழக்கைக்கு உதவும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். பின்பு எதற்கு இந்த 3 நாள் பயிற்சி? 
3 நாள் பயிற்சி என்பது வேளாண் வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை நமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. வேளாண் வாழ்வு மட்டுமின்றி இயற்கை குறித்த ஒரு புரிதலை, ஒரு புதுப் பார்வையை நமக்கு அளிப்பதாக இருந்தது. வானகம் மூன்று நாள் பயிற்சி பெற்ற பிறகு:
  • சக உயிரனங்களை நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
  • சூழலியல் குறித்து ஒரு விழப்புணர்வு அடைந்தேன்
  • சூழல் பாதுகாப்பிற்கு என்னளவில் என்ன மாற்றங்களை செய்து கொள்ள முடியுமோ அதை செய்கிறேன்
  • சூழல் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள முயற்சிக்கறேன்
  • சூழல் பாதுகாப்பு குறித்தும், அரசும் அதிகாரமும் பெருமுதலாளிகளும் நம் சூழலை எவ்வளவு சீர்கேட்டிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறித்தும்  கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நண்பர்களிடத்தும் உறிவனர்களிடத்தும் உரையாடுகிறேன்
  • சூழலியல் குறித்து ஒரு புரிதலை, இயற்கை மீது தன்னியல்பாக ஒரு நேசத்தை என் குடும்பத்தினரிடம் ஏற்படுத்தினால் அது நான் இந்த இயற்கைக்கு செய்யும் மகத்தான பணியாகக் கருதுகிறேன். 

வானகத்தில் அடுத்த பயிற்சி பெற மனம் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு சந்தர்ப்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...


பொறுப்புத் துறப்பு

இப்பதிவு முழுக்க ஓர் அனுபவப் பகிர்தல் மட்டுமே! இதை ஒரு இயற்கை வேளாண் வழிகாட்டியாக/கையேடாக யாரும் தயவு செய்து கருத வேண்டாம். அவ்வாறு கற்றுக் கொள்ள விரும்புவோர் நம்மாழ்வார் ஐயா அமைத்த வானகத்திலோ அல்லது இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் அவர்களிடமோ அல்லது அவர்களிடம் பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண் செயல்பாட்டாளராக இருக்கும் யாரிடமேனும் நேரடியாகச் சென்று பயிற்சி பெற வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

Wednesday, April 10, 2019

என்னை என்ன செய்தது வானகம்? நாள் 2

நாள் 2 (2019, ஜனவாி 5, சனி)

அதிகாலை 4.30 மணிக்கு மேல் ஒவ்வொருவராக எழுந்து அங்கங்கே திறந்தவெளியில் (பெண்களுக்கு மட்டுமே கழிப்பறை) இருட்டோடு இருட்டாக காலைக்கடன் முடித்து தேநீர் அருந்தி ஒருவழியாக 6 மணிக்குள் அனைவரும் விளையாட்டுத்திடல் வந்தடைந்தோம்.  

மரபு விளையாட்டு

தாமதமாக வருபவர் ஏதாவது வித்தியாசமாக செய்து காட்டிய பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்! இப்படி தாமதமாக வருபவரை மையப்படுத்தி ஏதாவது செய்து பின்பு வகுப்பைத் தொடங்குவது மூன்று நாட்களும் குதூகலமாக நடந்தது. முதல் நாள் வகுப்பறைக்குள் செருப்பில்லாமல் இருப்பதும் பிறகு வெளி வகுப்புகளுக்கு செருப்போடு போவதுமாக எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. எனவே இனி வானகம் விட்டுச் செல்லும் வரை காலணி அணிவதில்லை என்று முடிவோடு காலை விளையாட்டிற்குத் தயாராகச் சென்றேன்.

என்ன விளையாடினோம் என்று ஞாபகம் இல்லை ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிகாலை மார்கழிக் குளிரோடு தொடங்கிய விளையாட்டு மிகுந்த உற்சாகத்தையும் அகமகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்தது. இப்படி வெருங்காலோடு திடலில் விளையாடி பல வருடங்களுக்கு மேலாகிறது. ஒவ்வொரு நிகழ்வு முடிந்ததும் மனம் புதுப்பித்துக் கொண்டே இருந்தது!

பண்ணை வலம்

மொத்த மாணவர்களையும் இரண்டாகப் பிரித்து செந்தில் ஒரு சாராரையும் ரீகன் ஐயா (மற்றொரு ஒருங்கிணைப்பாளர்) மற்றவர்களையும் அழைத்து வானகம் சுற்றிச் சென்று பல்வேறு அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தனர். அவற்றுள் சில:
  • சூரிய ஒளி - தாவர வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்று, எனவே சூரிய ஒளி படரும் இடத்தை அடையாளம் கண்டு தாவரங்களை நட வேண்டும்
  • ஒரு சிறிய காட்டை காண்பித்து இந்தப் பகுதியில் உள்ள மரங்கள்/செடிகள் மற்றும் இதர தாவரங்கள் எவையும் எங்களால் ஏற்படுத்தப்படவில்லை, அனைத்தும் தாமாக வளர்தவை என்றும் இவ்வாறு நடப்பதில் (இயற்கையில்) பறவைகளின் பங்கு மிக முக்கியமானது என்றார்
  • வாய் மடை - வயல் பகுதியின் ஒரு மூலையில் சிறிய தொட்டி அமைத்து அதில் அமிர்த கரைசல்/பஞ்ச காவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களை நீரோடு கலந்து பின் வயலில் வெளியிடும் எளிய முறை
  • மழை நீர் அறுவடை - பிறை வடிவில் குட்டைகள் இருப்பதால் பெரும்பாலான மழைநீரை விரயமின்றி சேமிக்க முடியும். சருக்கலான பகுதியின் கடைசியில் பெரிய குட்டை அமைப்பதன் மூலமும் பெருவாரியான நீரை சேமிக்க முடியும் மற்றும் அப்பகுதியில் நீர் வழிந்து குட்டைக்குச் செல்லும் வழியில் சிறு சிறு குழிகள் அமைப்பதன் மூலம் அப்பகுதி முழுமைக்கும் நீர் சேமித்து நீராதாரத்தைப் பெருக்க முடியும்
  • உயிர் வேலி - ஆடு, மாடு, இதர கால்நடைகள் மற்றும் வெளி மனிதர்கள் நம் பண்ணைக்குள் அத்து மீறி உள்ளே வராமல் இருக்க முட்செடிகளைக் கொண்டு வேலி அமைத்தல். பெரும்பாலான உயிர்வேலிச் செடிகளில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளது. மூட்டு வலி, சிறுநீரகக்கல், ஜலதோஷம்/இருமல் போன்ற நாம் அன்றாடம் சந்திக்கும் சிறிய/பெரிய உடல் தொந்தரவுகளுக்கு எளிய மருந்தாக இவைகள் பெரிதும் துணை நிற்கும்
  • கிராஃப்டிங் - ஒரு தாவரத்தை இன்னொன்றின் கிளைப்பகுதியோடு இணைத்து புது வகை செய்யும் கலப்புப் பயிர் முறை
  • கம்ப்போஸ்ட் - கால்நடைக் கழிவுகள் மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்தல்

இன்னும் பல வேளாண்மை அடிப்படைகளை எளிமையாக விளக்கினர் செந்தில் மற்றும் ரீகன்.

பண்ணை வடிவமைப்பு

மதிய உணவு முடித்து சற்று மயக்கத்தோடு வந்தமர்ந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது. வகுப்பறைக் கதவின் இடது புறம் அமர்ந்திருந்த நான் கதவின் வலது புறம் புதிதாக ஒரு பெரியவர் அமர்ந்ததைக் கண்டேன், அவர் சக மாணவர் ஒருவரை மின் விளக்கைப் போடச் சொன்னார். செந்தில் பண்ணை வடிவமைப்பு வகுப்பு எடுப்பவரை அத்திவெட்டி ரமேஷ் என்று அறிமுகப்படுத்தினார். உடனே எனக்கு என்னோடு மருது பாண்டியர் கல்லூரியில் படித்த சக மாணவன் ரமேஷ் ஞாபகம் வந்தது. நான் வலதுபுறம் கண்ட பெரியவர் என்னோடு படித்த சக மாணவன் என்ற இன்ப அதிர்ச்சியும் அவரிடம் நான் மாணவனாகக் கற்றுக் கொள்ளப்போகிறேன் என்பது ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவராக சுயஅறிமுகம் செய்யச் சொல்லினார் நண்பர் ரமேஷ். என் முறையில் தஞ்சாவூர் கணபதி என்று மட்டும் கூறினேன். மறு விநாடியே "மருதுபாண்டியர் கணபதி சுப்பிரமணியன்?" என்று கேள்வி கேட்டார். ஆமாம் என்று புன்னகைத்தேன்! இன்னொரு சக மாணவர் மாணிக்கம் என்று கூறியவுடன் "முழுப்பெயரே அதுதானா?" என்றும் "உங்களுக்கு வேறு எதாவது பெயர் உள்ளதா?" என்றும் தனக்கே உரிய நகைச்சுவை பாணிப்பில் ரமேஷ் இயல்பாகக் கேட்டது எத்தனை பேருக்குப் புரிந்தது என்று தெரியவில்லை. என் வாழ்வில் தரையில் படம் வரைந்து வகுப்பெடுத்த ஒரே ஆசிரியர் ரமேஷ் மட்டுமே. இரு சக மாணவர்களை அழைத்து சாக்பீஸ் மூலம் தரையிலேயே பல படங்களை வரைந்து பண்ணை வடிவமைப்பு குறித்து பல அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தார் ரமேஷ். அவற்றுள் சில:
  • ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் தாராளமாக தற்சார்பு முறையில் வேளாண்மை செய்ய முடியும்
  • நிலம் வாங்கியதும் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நிலத்தைச் சுத்தப்படுத்தவது
  • நீர் வசதி செய்வது. ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்வதற்கு முன் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது. அதற்கு பல வழிமுறைகள் உள்ளன, அதில் நமக்கு எது சரியாகத் தோண்றுகிறதோ அதைப் பின்பற்றலாம்
  • உயிர் வேலி அமைப்பது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பிற்கு சுமார் 5 அடி அகலத்தில் உயிர் வேலி அமைக்கலாம்
  • நிலத்தின் தாழ்வான பகுதியில் நீர் சேகரிப்புக் குட்டைகள் அமைத்துக் கொள்வது
  • நிலத்தின் மேட்டுப் பகுதியில் நமக்கான வீட்டை அமைத்துக் கொள்வது
  • வீட்டின் பின் புறத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துக் கொள்வது
  • வீட்டிலிருக்கும்போது நமது கண் பார்வையில் இருக்கும்படி கால்நடைத் தொழுவம் அமைப்பது
  • வீட்டருகே பூந்தோட்டம் அமைப்பது
  • வீட்டைச்சுற்றி பழத் தோட்டம் அமைப்பது
  • சிறு தாணிய வகைகள், எண்ணை வித்துக்கள் இவைகளும் தேவைக்கேற்ப பயிரிடுவது
  • ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் முக்கியமானது நாம் அங்கு தங்கியிருந்து தினசரி சில மணி நேரங்கள் ஒதுக்கி வேலை செய்ய வேண்டும், பிறரை நம்பி இருப்பது சரி வராது. அதே நேரத்தில் பண்ணை வேலையாட்கள் தங்குவதற்கும் அவர்களின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதுமாக அப்பண்ணை இருப்பது அவசியம்
இன்னும் பல முக்கிய விசயங்களை எளிமையாகவும் நகைச்சுவையோடும் நம்மோடு பகிர்ந்து கொண்டார் ரமேஷ். வகுப்பு முடிந்து இருவரும் பரஸ்பரம் தற்போதைய வாழ்வு பற்றி பகிர்ந்து கொண்டோம். இறுதி ஆண்டில் மாணவர் விடுதியில் இருந்து கல்லூரிக்குப் பேருந்தில் செல்லும் போது ஓட்டுநர் அருகே அமர்ந்து  நான் அடித்த ஒரு மொக்கை ஜோக்கை ரமேஷ் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்தது வியப்பாக இருந்தது. சக மாணவன் நமக்குப் பின்னாளில் சிறந்த ஆசிரியராக வருவது எத்தனை பேருக்கு வாய்க்குமோ தெரியாது ஆனால் எனக்குக் கிடைக்கப்பெற்றது.

இடுபொருள் செய்முறை

கணேஷ் ஐயாவும் ஒரு அக்காவும் (பெயர் ஞாபகம் இல்லை மன்னிக்கவும்) இயற்கை இடுபொருள் செய்முறை விளக்கங்களை மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தனர். வெவ்வெறு வகையான இடுபொருள்கள் பற்றி விளக்கமளித்தனர், அவற்றுள் முக்கியமானவை:
  • அமிர்த கரைசல்
  • பஞ்ச காவ்யா (தச காவ்யா/மாட்டு ஊட்டம்)
  • மீன் அமிலம்
  • தேமோர் கரைசல்
  • பூச்சி கொல்லிகள் விரட்டிகள்
இன்னும் பல செய்முறைகள் ஒரு முழுப் புத்தகத் தொகுப்பாகவே உள்ளது, அது அனைவருக்கும் பயிற்சியின் முடிவில் இலவசமாகவும் வழங்கப்பட்டது.

களப்பயிற்சி

மாலை நெருங்கியதும் களப்பயிற்சி தொடங்கியது. செந்தில் அவர்கள் ஒரு சிறிய இடத்தைத் தேர்வு செய்து அதில் இரு மடிப்புப் பாத்தி பற்றி பயிற்சி கொடுத்தார். வட்டப் பாத்தி, மேட்டுப் பாத்தி முறைகளும் மற்றும் நீர்ப்பாசன முறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன. தாவரங்களுக்கு நீர்ப்பாய்ச்சுவது என்பது அதன் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதாய் இருக்க வேண்டுமே தவிர நீரை அப்படியே ஊற்றுவதல்ல என்றும் பாத்தி முறையில் மேட்டுப் பகுதியில் பயிர்கள் நடுவதும் அருகில் சமப் பகுதியில் நடைபாதையுமாக வடிவமைக்க வேண்டும் என்றும் முக்கியமாக எடுத்துரைத்தார்.

மசானபு புக்கோக்கா

இரவு உணவு முடித்து பின் வழக்கம்போல் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கருத்துப் பரிமாரப்பட்டது. உறங்குவதற்கு முன் உலகப்புகழ்பெற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு புக்கோக்கா அவர்களின் ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது, அது அனைவருக்கும் அவர் பற்றிய ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தியது. மசானபு புக்கோக்கா ஐயாவைப் பார்தததும் எனக்கு இயக்குனர் ராஜீமுருகன், அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்த மசானபு புக்கோக்கா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகம் ஞாபகம் வந்தது. உலக இயற்கை வேளாண் ஆசானைப் பற்றி படம் பார்த்த திருப்தியோடு அனைவரும் உறங்கச் சென்றோம்.

 

பொறுப்புத் துறப்பு

இப்பதிவு முழுக்க ஓர் அனுபவப் பகிர்தல் மட்டுமே! இதை ஒரு இயற்கை வேளாண் வழிகாட்டியாக/கையேடாக யாரும் தயவு செய்து கருத வேண்டாம். அவ்வாறு கற்றுக் கொள்ள விரும்புவோர் நம்மாழ்வார் ஐயா அமைத்த வானகத்திலோ அல்லது இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் அவர்களிடமோ அல்லது அவர்களிடம் பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண் செயல்பாட்டாளராக இருக்கும் யாரிடமேனும் நேரடியாகச் சென்று பயிற்சி பெற வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

என்னை என்ன செய்தது வானகம்? நாள் 1

வானகம் என்றால் என்ன?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவா்களால் நிறுவப்பட்ட தற்சார்பு வாழ்வியலுக்கான ஒர் பயிற்சி/ஆராய்ச்சி மையம். இதன் முக்கியமான மூன்று இலக்குகள்:
  1. நஞ்சில்லா உணவு
  2. மருந்தில்லா மருத்துவம்
  3. சுவரில்லா கல்வி

மேலும் விபரங்களுக்கு Vanagam Official Site

வானகத்தில் நான் பெற்ற 3 நாள் பயிற்சி வாழ்வின் மறக்க முடியாத ஒரு பேரானந்த அனுபவம்! ஒரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடைவிடாது நடந்தது (இரவு நேரம் தவிர). தேநீர்/உணவு இடைவெளி தவிர்த்து ஓய்வு இல்லாததால் அடுத்தடுத்த நாட்களில் முதல் நாள் நிகழ்வுகள் நினைவுகூறுவதற்கு சற்று கடினமாக இருந்தது. பயிற்சி முடிந்த வீடு வந்த கையோடு இந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக (பேப்பர்/பேனா கொண்டு) எழுத  எண்ணியிருந்தேன். வழக்கம்போல் சோம்பேறித்தனத்தால் அது நிகழாமல் போயிற்று. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து இப்போது ஒரு வலைப்பதிவில் எழுதியுள்ளேன்!

நாள் 1 (2019, ஜனவாி 4, வெள்ளி)

காலை சுமார் 10 மணியளவில் வானகம் வந்தடைந்தோம். நேராக அனைவரையும் நம்மாழ்வார் ஐயாவின் நினைவிடத்திற்கு அழைத்து சாலியமங்களம் குமார் ஐயா அவர்களின் ஒரு சிறிய அறிமுகமும், நம்மாழ்வார் ஐயாவிற்கு அஞ்சலியும் நடந்தது. பிறகு காலை உணவு முடித்த பின் (பெரிய வட்ட) வகுப்பறைக்கு வந்தபின் 3 நாள் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஐயா அவர்களை அறிமுகம் செய்தனர்.

வேளாண் அரசியல்

முதல் வகுப்பாக அரச்சலூர் செல்வம் ஐயா அவர்கள் வேளாண் அரசியல் குறித்துப் பேசினார். முழுமையாக அவர் பேசியது நினைவில் இல்லையென்றாலும் அதன் சாராம்சம் பின் வருமாறு:
  • 20ம் நூற்றாண்டின் மத்தியல், அதாவது சுமார் 1960களில் பசுமைப்புரட்சி என்ற மாபெரும் சாபக்கேடு இந்தியாவை எப்படி ஆட்கொண்டது
  • பசுமைப்புரட்சியால் நம் பாரம்பரிய/எளிய/அறிவார்நத வேளாண் முறைகளிலிருந்து நாம் எப்படி ஒரு பெரும் வணிக சந்தையாக மாறினோம்
  • நம் பாரம்பரிய நெல் வகைகளக்கு பதிலாக குள்ளரக வகை நெல்கள் எப்படி நம் மீது திணிக்கப்பட்டது, இன்னும் இது போல் நம் மரபு சாரா பல தாணியங்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது
  • இயற்கை இடுபொருள்களைக் கொண்ட நம் வேளாண்முறை எப்படி செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு (உயிர்க்கொல்லி) மாறியது
  • 1980களில் பசுமைப்புரட்சிக்குப் பிறகு மேற்கொண்ட ஆய்வில்  90% தாய்மார்களின் தாய்ப்பால் நஞ்சுடன் இருப்பது கண்டறியப்பட்டதும், இவ்வுண்மையை உலகறியவிடாது (மண்சான்டோ போன்ற) வேளாண் பெருமுதலாளிகளை எப்படி நம் அரசு காப்பாற்றியது
  • விவசாயத்தில் மேலோங்கி இருந்த பஞ்சாப் மாநிலம் கேன்சர் நோயாளிகளின் மாநிலமாக மாறியது (கேன்சர் ரயில்!)
போன்ற பல புத்தி தெளியவைக்கும் செய்திகளை மிக எளிமையாக நமக்கு எடுத்துரைத்தார் அரச்சலூர் செல்வம். முதல் நாள் இரவு சகோதரரோடு இயற்கை குறித்த புரிதல்களை பரஸ்பரம் விவாத்துக் கொண்டு தூங்காமல் வந்ததாலும் பசி வேளை நெருங்கியமையாலும் அவ்வப்போது தூக்கம் வந்தது. அதைத் தாண்டியும் செல்வம் ஐயா அவர்களின் அற்புதமான உரை இவ்விசயங்களை உள்வாங்கச் செய்தது. வானகம் 3 நாள் பயிற்சியின் முதல் ஆசான் செல்வம் ஐயா அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள்!

​வகுப்பு முடிந்தவுடன் செந்தில் ஐயா அவர்கள் அவ்வகுப்பைப்பற்றிய கருத்துக்களும் பின்னூட்டங்களும் கேட்டுக் கொண்டார்​. எங்களுக்கும் சந்தேகங்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு நேரம் வழங்கப்பட்டது. இந்த கருத்துப் பறிமாற்ற முறையை ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் செந்தில் மிக நேர்த்தியாக செய்து வந்தார்.

​தேனீ வளர்ப்பு

பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்கள் தேனீ வளர்ப்பு குறித்து மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார். தேனீ வளர்ப்பு வகுப்பிற்கு, (பெரிய வட்ட) பிரதான வகுப்பறையின் அருகேயுள்ள ஒரு மரத்தருகே அமைந்திருந்த ஒரு செயற்கைத் தேன் கூட்டை சுற்றி நின்று கற்றுக்கொண்டோம். அதன் முக்கிய குறிப்புகள்:
  • மகரந்தச் சேரக்கை எனும் செயல்பாடு மூலம் உணவு உற்பத்தி செய்வதில் தேனீக்களின் பங்கு இப்பூவுலகில் மகத்தானது
  • ஒரு துளி தேன் சேகரிக்க தேனீக்கள் கொடுக்கும் உழைப்பு அளப்பரியது
  • தேன் சேகரிக்க தேனீக்கள் செல்லும் பாதையை நடன மொழி மூலம் பரிமாரிக் கொள்கின்றன
  • மழை வருவதைக் கணிக்கும் திறன் தேனீக்களுக்கு உண்டு
  • அறுங்கோண முறையில் தேனடை கட்டுவதன் மூலம் அதிகபட்ச தேன் கூட்டை கட்ட முடிகிறது 
  • தேன் சேகரிப்பிற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பெட்டியின் நுணுக்கங்கள் மற்றும் அதைக் கையாளும் முறைகள்
  • ஒவ்வொரு கூட்டிலும் ராணி தேனீ, ஆண் தேனீ, பணி தேனீ என்று மூன்று வகை உண்டு
  • தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்த பிறகு கொஞ்சம் தேன் தேனீக்களுக்கு வைக்க வேண்டும் என்பது தேன் தர்மம் 
  • இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் ஒருவரின் தோட்டத்தில் இயல்பாகவே தேனீக்கள் வந்து சேரும்!
தேனீ வளர்ப்பு குறித்த விளக்கங்களுக்குப் பிறகு ஒரு சிறிய தேநீர் இடைவெளி. அதன் பிறகு கால்நடை வளர்ப்பு பற்றி குமரவேல் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்.

​கால்நடை வளர்ப்பு

தன்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகமும் தான் எப்படி நம்மாழ்வார் ஐயாவோடு பயனித்தார் என்பதையும் கூறினார் குமரவேல் அவர்கள். திருச்சியில் அவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக செயலாற்றியது பற்றியும் கூறினார். பின் எங்களை அறிமுகம் செய்து கொள்ளச் செய்து விட்டு தன் வகுப்பைத் தொடங்கினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த அவ்வகுப்பில் பெரிதாக எதுவும் நினைவில் இல்லை, கீழே குறிப்பிட்ட விசயங்களைத் தவிர
  • கால்நடைகள் அனைத்தும் உள்ளூர் ரகத்தைக் கொண்டிருக்கும், எனவே கால்நடைகள் வாங்குவதற்கு முன் உங்கள் ஊர் ரக கால்நடைகளைத் தேர்நத்தெடுப்பது சிறந்தது
  • எந்த உயிரனமும் தன் கழிவை உண்ணாது என்ற அடிப்படையைக் கருத்தில் கொண்டு, கால்நடைக் கழிவுகள் இல்லாத இடத்தில் அவைகளுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாது நடந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாய் இருந்தன. இத்தனை எளிமையாகவும் இயல்பாகவும் சுமார் 40+ மாணவர்களுக்கு இவ்வளவு விசயங்களை எடுத்துரைக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. இரவு உணவு முடித்து ஒரு ஐந்து நிமிடம் செந்தில் அவர்கள் அன்று நடந்த வகுப்புகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார். காலை ஐந்து மணிக்குத் தயாராக அனைவரும் விளையாட்டுத் திடலுக்கு வந்து விடவேண்டும் என்ற அன்புக் கட்டளையோடு எங்களுக்கு உறங்குவதற்கான நேரம் வழங்கப்பட்டது. முதல் நாள் சிவராத்திரியாக இருந்தமையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதியான ஆழ்நத உறக்கம் கொண்டேன்.

பொறுப்புத் துறப்பு

இப்பதிவு முழுக்க ஓர் அனுபவப் பகிர்தல் மட்டுமே! இதை ஒரு இயற்கை வேளாண் வழிகாட்டியாக/கையேடாக யாரும் தயவு செய்து கருத வேண்டாம். அவ்வாறு கற்றுக் கொள்ள விரும்புவோர் நம்மாழ்வார் ஐயா அமைத்த வானகத்திலோ அல்லது இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் அவர்களிடமோ அல்லது அவர்களிடம் பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண் செயல்பாட்டாளராக இருக்கும் யாரிடமேனும் நேரடியாகச் சென்று பயிற்சி பெற வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!